திருமணப் பொருத்தம்

 நட்சத்திரப்படி திருமண பொருத்தம் பார்ப்பது சரியா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சொல்வது வழக்கம். ஒரு ஆணும் பெண்ணும் சரியான பருவத்தில், சட்டப்படி  அல்லது சாஸ்திர சம்பிரதாயப்படி அல்லது குல வழக்கப்படி  முறையான கணவன் மனைவி எனும் உறவில் இணைந்து குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது திருமணம்.

மேற்கத்திய கலாச்சார முறையில் ஆணும் பெண்ணும் அவரவர் இஷ்டம் போல் திருமணம் செய்துகொண்டு மனதிற்கு பிடித்து இருக்கும் காலம் வரை சேர்ந்து வாழ்வதும்,கருத்து வேறுபாடுகள் வந்தால் விவாகரத்து செய்து பிரிந்து வேறு துணை தேடி மணம் முடித்துக் கொள்வதும் சகஜம்.

ஆனால் இந்திய கலாச்சார முறை இதற்கு முற்றிலும் மாறுபட்டது, வேறுபட்டது. ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்வது இந்திய கலாச்சார முறை.

ஒரு முறை திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் எத்தனை கஷ்டங்கள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அத்தனையையும் சகித்து சமாளித்து, ஆயுள் கால கடைசி நாள்வரை ஒன்றாக இணைந்து வாழ்ந்து இறப்பதை வலியுறுத்துவது இந்திய கலாச்சாரம் .இந்திய பெண்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

தவிர்க்கமுடியாத மிகச்சில சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் காரணம் விவாகரத்து ஏற்பட்டாலும் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை நமது சமுதாயம்முழு மனதோடு ஏற்றுக்கொள்வதில்லை.

துணையை பிரிந்து தனியாக வாழும் பெண்களை ஜாடைமாடையாக ஏசி பேசி மனதை நோகடிக்கின்றது விருப்பத்தை சாகடிக்கிறது இன்றைய சமூகம். அதனாலேயே இன்றைய நாட்களில் தங்கள் பாதுகாப்பிற்காக பெண்கள் மறுமணத்தை ஒப்புக்கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.

ஆகவே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து திருமணத்தில் இணையும் கணவன் மனைவி எனும் இந்த பந்தம் வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடைபெற வேண்டும். அது நிலைத்து நீடித்து இருக்க வேண்டும் என்று அனைத்து ஆணும் பெண்ணும் (குறிப்பாக பெண்கள்) விரும்புகின்றனர். 

அதற்காகவே ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கு பொருத்தமான ஏற்ற துணையை தேடி உறுதி செய்யும் பொருட்டு ஒன்றுக்கு பத்து முறை யோசித்து அடிப்படை குடும்ப நிலை,கல்வி வசதிவாய்ப்பு பொருத்தம் பார்த்து அதன்பின் இறுதி ஆலோசனையாக ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள நம்பிக்கை காரணம் ஜோதிட பொருத்தம் இருந்தால் மட்டும் இணையும் இறுதி முடிவோடு ஜோதிடப்படி பொருத்தம் பார்க்க ஜோதிடர்களை நாடி பொருத்தத்தை உறுதி செய்கின்றனர்.

வாடிக்கையான குடும்ப ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்து, போதாக்குறைக்கு மேலும் இரண்டு மூன்று பிரபல ஜோதிடர்களிடம் பொருத்தம் சரியாக உள்ளதா என  அவர்கள் ஆலோசனையும் பெற்று திருமணத்தை உறுதி செய்கின்றனர். 

இருந்தாலும் இன்றைய தினங்களில் பெரும்பாலானவர்களின் திருமண வாழ்வில் கணவன் மனைவிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகளினால் பிரச்சனை, மனக்கசப்பு, விவாகரத்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கருத்து வேறுபாடுகள் இல்லாத கணவன் மனைவியே இல்லை எனும் அளவிற்கு கலாச்சாரமும் மாறி போயிருக்கிறது.

அதுமட்டுமின்றி இருவரில் ஒருவர் இளம் வயதிலேயே எதிர்பாரா துயர அசம்பாவித சம்பவங்களால் இறக்க நேரிட்டு ஒருவர் தனிமைப்பட்டு இரண்டாம் திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது. 

நாள் பார்த்து நல்ல நேரம் பார்த்து நட்சத்திர(பத்து)பொருத்தம் பார்த்து பத்தில் எட்டிற்கு மேல் முக்கிய பொருத்தம் உள்ளது என திருமணம் செய்தும் இவைகள் நடப்பது ஏன்? இவையெல்லாம் பார்க்கும் பொழுது நட்சத்திர பொருத்தம் என்பது உண்மையில் சரியானதுதானா எனும் சந்தேகம் எழுகிறது.

உண்மையில் பொருத்தம் என்பது என்ன?

பொருத்தம் என்பதுஇருவரின் கல்வித் தகுதி, வேலை வருமானம் உயரம் அழகு நிறம் தோற்றம் அல்லது இரு வீட்டாரின் பொருளாதார அந்தஸ்து கௌரவம் இவைகளா? இவைகள்தான் பொருத்தம் எனில் இருவரும் இணைபிரியாது ஆயுள் இறுதிவரை ஒற்றுமையாய் வாழ வேண்டும் அல்லவா? ஆனாலும் பிரிவுகள் நடக்கிறது. பெரும்பாலான பிரிவுகளுக்கு காரணம் இருவரின் வெவ்வேறு அடிப்படை பிடிவாத (ego) குணம்.விட்டுக்கொடுத்து போக இயலாத ஈகோ எனப்படும் ஆணவம் பிடிவாதம் எனும் பிறவி தன்மை அல்லது இயல்பு.

கருத்து வேறுபாடுகள் வரும்போது ஒருவருக்கொருவர்  விட்டுக்கொடுத்து போக வேண்டும். ஒருவர் குரலை கோபத்தில் உயர்த்தும் பொழுது மற்றவர் குரலை தாழ்த்த வேண்டும். தவரும் பட்சம் வார்த்தைகள் தடித்து பிரச்சனை பெரிதாகி பிரிவு தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

குணம் தான் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம் எனும் பொழுது திருமண பொருத்தத்தில் முதலில் நாம் பார்க்க வேண்டியது குணப்பொருத்தம் தான். நட்சத்திரபடியான பத்து பொருத்தத்தில் குண பொருத்தம் என்று ஒன்று இல்லை.

நல்ல பொருத்தம் பார்க்க நல்ல அனுபவ ஞானம் கொண்ட ஜோதிடரை அணுகி,இருவரின் நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்ப்பதை தவிர்த்து குணம்,ஆயுள்,எதிர்கால வாழ்க்கை நிலை அமைப்பை துல்லியமாக சுட்டிக்காட்டும் அவரவர் ஜாதக  ராசி கட்டப்படி லக்கினம், கிரகநிலை,தசா புக்தி அடிப்படையில் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணத்தை உறுதி செய்யவேண்டும். 

ஆனால்ந ட்சத்திரப் பொருத்தம் எனப்படும் பத்து பொருத்தம் பார்க்கும் எளிய முறையில் பத்திற்கு எத்தனை பொருத்தம் உள்ளது என திருமண பொருத்தம் பார்ப்பது பெருகி வாடிக்கையாகிவிட்ட இன்றைய நாட்களில் பெற்றோர்கள் இதை மட்டுமே முழுமையாக நம்புகின்றனர்.

நட்சத்திர பொருத்தம் எனப்படும் இந்தப் பத்துப் பொருத்தம் பார்க்கும் முறை ஜோதிடர்களுக்கு எளிதானது என்பதால் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான ஜோதிடர்களால் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நட்சத்திரப் பொருத்தப்படி பத்துக்கு ஆறு பொருத்தம் மத்திமம்,எட்டு பொருத்தம் உத்தமம்,பத்தும் பொருந்தி இருந்தால் மிக உத்தமம் என ஒரு நிமிடத்தில் அட்டவணை பார்த்து யாரும் எளிதில் சொல்லிவிட முடியும்.இதற்கு ஜோதிடர் தேவை இல்லை.

இவ்வாறு பொருத்தம் பார்ப்பதில் முன்னர் சொன்னது போல பல குறைகள் உண்டு. குறிப்பாக

இருவரும் வெவ்வேறு அடிப்படை பிடிவாத குணம் கொண்டிருப்பின் அதை கணிக்க முடிவதில்லை.

உண்மையில் திருமணபொருத்தம் என்பது எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் சந்தர்ப்பங்களிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகும் அனுசரிப்பு குணம், சங்கடம் குறைந்த சந்தோஷமான எதிர்கால அமைப்பு மற்றும் இருவருக்குமான நீடித்த ஆயுள் உள்ளதா என்பதை கணிப்பது மட்டுமே.

 ஆகவே ஒத்த குணங்கள், நல்ல எதிர்கால வாழ்க்கை அமைப்பு ,நீடித்த ஆயுள் உள்ள இருவரை சேர்த்து வைப்பது நல்ல பொருத்தம் என சொல்லலாம்.

பத்து பொருத்தம் பார்க்கும் நட்சத்திர பொருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள பொருத்தங்களில், பொருந்தக் கூடிய எந்தப் பொருத்தமும் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்த அனைவருக்கும் பொதுவானவை என்பதால் தனி ஒருவருடைய குணத்தையும் எதிர்கால பலன்களையும் ஆயுளையும் சரியாக கணிக்க இயலாது.  

நட்சத்திரம் என்பது நீண்ட கால அளவு கொண்டது.அதாவது (ஒரு நாள்)சற்றேறக்குறைய இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கக் கூடியது. இருபத்தி நான்கு மணி நேர கால இடைவெளியில் (சற்று முன் பின் இருக்கும்) பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளும் ஒரே நட்சத்திரம் கொண்ட குழந்தைகளே. இவர்கள் அனைவரின் குணங்களும் எதிர்காலமும் ஆயுளும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்தை குறிக்கக்கூடிய ஒரு நாளில் 12 லக்கினங்கள் மாறியிருக்கும். சற்றேறக்குறைய இரண்டு மணி நேர இடைவெளியில் மாறக்கூடியது லக்கினம். இந்த சிறிய இடைவெளியில் பிறக்கக் கூடிய ஒவ்வொரு லக்கின குழந்தைகளும் சுமாராக ஒத்த குணம் உடையவராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஒரு நட்சத்திர நாளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும் 12 லக்கினங்களில் பன்னிரண்டு  வெவ்வேறு வித குணம் உடையவர்கள் பிறந்திருப்பார்கள் என்பது (பிராக்டிகல்) நடைமுறை சாத்திய உண்மை.

எனவே ஒருவருடைய குணத்தை லக்கினபடி ஜாதககட்டம் பார்த்து கணிக்க வேண்டுமே தவிர நட்சத்திரப்படி கணிப்பது தவறுதல் ஏற்படும்.

அதேபோல பத்து பொருத்தத்தில் நட்சத்திரங்களை வைத்து ஒருவருடைய ஆயுளை கணிக்க இயலாது. ஆயுள் கணிப்பிற்கு பிறப்பு ராசி சக்கரமும் அன்றைய கிரக நிலைகளும் தசாபுக்தி அமைப்புகளும் கண்டிப்பாக தேவை.

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் எதிர்கால சம்பவங்களை தசா புத்திகளும் கோச்சாரமும் சேர்ந்து தீர்மானிக்கின்றன எனும் பொழுது நட்சத்திர பொருத்தம் இருப்பதால் மட்டும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எந்த அடிப்படையில், நம்பிக்கையில் பொருத்தங்களை தீர்மானிக்கமுடியும்.

ஒரு  குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவனுக்கு மற்றொரு குறிப்பிட்ட மாதத்தில் பிறந்த ஒருத்தியை திருமணம் செய்யலாம், அல்லது செய்யக்கூடாது பொருத்தம் வராது என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அதைப்போலத்தான் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன் மற்றொரு நட்சத்திரத்தில் பிறந்தவளை திருமணம் செய்யலாம், அல்லது செய்தல் கூடாது, பொருத்தம் உண்டாகாது என்று சொல்வதும் அப்படியே.அது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று.

நட்சத்திரம் மட்டும் ஒருவருடைய குணத்தை யோ வருங்கால பலனையோ ஆயிளையோ நிர்ணயிக்காது. பிறப்பு ஜாதகம் இவற்றை கணிக்க பயன்படும் ஒரு கருவி.ஆகையால் இம் மூன்றையும் பிறப்பு ஜாதகப்படி கணித்துப் பார்க்காமல் நட்சத்திர பொருத்தம் அல்லது பத்து பொருத்தம் மட்டும் பார்த்து இருவரையும் சேர்த்து வைப்பது சரியான பொருத்தம் ஆகாது.

பின் எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும்?

தனிநபர் பிறப்பு ஜாதகப்படி அமையப்பெற்ற ராசிக்கட்ட கிரக நிலைகளை வைத்து ஆராய்ந்து பார்த்து பொருத்தம் பார்ப்பது சரியா?

இருவரில் ஒருவர் அல்லது ஒருவருக்கொருவர்   அனுசரித்து விட்டுக்கொடுத்து போகும்  நற்குணங்கள் கொண்டிருப்பது, இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கு நல்ல தசா புக்தி நடப்பது, இருவருக்கும் நல்ல ஆயுள் பலம் உண்டா என ஆய்வு செய்து இம்மூன்றையும்  ஓரளவு சரியாகச் கணித்து இருவரையும் சேர்ப்பது சரியான திருமணப் பொருத்தம்.

இம்மூன்றையும் கணிக்க இருவரின் பிறப்பு ஜாதகம் அவசியம். பிறப்பு ஜாதகம் இல்லாவிடினும் பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் இம்மூன்றும் இருந்தால் ஒருவருடைய ஜாதகக் கட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கணித்துக் கொள்ள முடியும்.

என்னதான் ஒரு ஜோதிடர் பிறப்பு ஜாதக கட்டம் பார்த்து ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைத்தாலும் ஒரு சில திருமணங்கள் பின்னடைவை சந்திக்கவே செய்யும். விவாகரத்து வரை கூட செல்லலாம். 

ஜோதிடர் என்பவர் உலகில் எல்லாம் அறிந்த ஞானி அல்ல. அவரும் ஒரு சாதாரண மனிதரே.

ஜோதிடப்படி மனித வாழ்க்கையில் அனைத்து சம்பவங்களும் நடக்கின்றன என்றாலும் அதை கனிக்கும் அத்தனை அறிவும் திறமையும் அனுபவமும், இயற்கையை கனிக்கும் சக்தியும் எவருக்கும் கிடையாது என்பதே உண்மை. இயற்கை நிகழ்வுகளை எதிர்கால சம்பவங்களை இயற்கை மட்டுமே தீர்மானிக்க முடியும்.

இயற்கையை கணிக்கும் மனிதன் இருந்தால் அவனை இறைவன் என்று சொல்லலாம்.

திருமணங்களை இருவீட்டாரோ உறவினர்களோ ஜோதிடர்களோ நிச்சயம் செய்வதில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதே முன்னோர்களின் கூற்றாக உள்ளது.

யாருக்கு யார்,யாருடன் இணைந்து  குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை கிரகங்களும்,இயற்கையும் சேர்ந்து அவரவர் பிறந்த ஜாதகப்படி சந்தர்ப்பங்களைஅமைத்துக் கொடுத்து சேர்த்து வைக்கின்றன.அதன்படி அவர்கள் கணவன் மனைவியாக ஒன்றினைகின்றனர்என்பது நிதர்சனம்.

நல்ல சந்தர்ப்பங்களை சாதகமாக்கி நல்ல பொருத்தமான துணையை இணைத்திட  ஜோதிட சாஸ்திரப்படி ஜோதிடர் ஜாதக ராசிக்கட்டம்,நடப்பு தசா புத்தி அன்றைய கோச்சாரம் நிலை இவைகளை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து இணைப்பது நல்ல பொருத்தம்.

இவ்வித பொருத்தம் பார்த்து இணையும் குடும்ப வாழ்க்கை  பெரும்பாலும் நன்றாகவே இருக்கும்.

ஜோதிட சாஸ்திர அடிப்படை விதிகளுக்கு முற்றிலும் ஒத்துவராத நட்சத்திர பொருத்தம் எனும் பத்து பொருத்தம் முறையில் திருமண பொருத்தம் பார்ப்பது எந்த விதத்திலும் அடிப்படைத்தன்மை (லாஜிக்) இல்லாதது. இதைப் பார்க்க வேண்டியது அவசியமில்லை.இதில் எந்த பயனும் இல்லை.

நான் சொல்ல வேண்டியதைச் தெளிவாகசொல்லி விட்டேன்.

நட்சத்திரப் பொருத்தத்தை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

Comments

Popular posts from this blog

ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்